கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.7.50 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.7.50 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Update: 2021-12-19 16:21 GMT

சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் கிராமங்களுக்கு ‘முன்மாதிரி கிராம விருது’ மற்றும் பரிசுத் தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அறிவுசார் திறமைகள் மூலம் சுகாதாரப் பழக்க வழக்கத்தை ஊக்குவித்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவதில், சமுதாயத்திற்கும் ஊராட்சி அமைப்புகளுக்கும் மேலாண்மைத் திறனை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் ஆகியனவற்றில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல். நிலத்தடி நீர் கிடைக்கும் நிலை, நீராதாரம் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் கிராமத்தை தேர்வு செய்து ஊக்குவிக்கும் விதமாக பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. தற்போது, அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘முன் மாதிரி கிராம விருது’ தோற்றுவிக்கப்பட்ட மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி என்கின்ற அடிப்படையில் 37 கிராமங்களுக்கு ‘முன் மாதிரி கிராம விருது’ வழங்கி கௌரவிப்பதுடன் இதற்கான கேடயமும் 7.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

மேலும், மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் ‘முன்மாதிரி கிராம விருது’ வழங்குவதுடன், கேடயமும் தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News