97.5% பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது... அமைச்சர் தகவல் !!
97.5% பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது... அமைச்சர் தகவல் !!
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தன. பின்னர், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ரூ.5200 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டு 97.5 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தமிழகத்தில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து போலி நகைகளை அடகு வைத்தும் மற்றும் முறைகேடாக நகைக்கடன் பெற்றது போன்றவை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகுதி வாய்ந்த 97.05 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பயனாளிகளுக்கும் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று அவர் தெரிவித்தார்.
newstm.in