ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் வெளியேறிய முன்னாள் எம்.பி. மைத்ரேயன் !!
ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்ற கூட்டத்தில் வெளியேறிய முன்னாள் எம்.பி. மைத்ரேயன் !!
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுகவின் அவை தலைவரை தேர்வு செய்யவது, பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், ஜனாதிபதி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் என நூறுக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவின் எந்தஒரு ஆலோசனைக் கூட்டம் ஆனாலும் சரி வாக்குவாதங்கள், காரசார விவாதங்களும் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு நடைபெறக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் உட்கட்சி பிரச்சினைகள், கட்சி சார்ந்த ரகசியங்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியே கசிந்து வருகிறது.
இதனால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தி அடையும் சூழல் ஏற்பட்டது. இதனால், இந்த தகவல்கள் எவ்வாறு கசிகிறது என்பதை ஆராய்ந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்கும் சிலர் செல்போனை ஆன்செய்து வைத்திருப்பதாகவும், அதன் மூலம் வெளியே இருக்கும் சிலர் ஒட்டு கேட்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையேயும், கட்சி நிர்வாகிகளுக்கு இடையும் எழும் விவாதங்களும் அச்சுமாறாமல் உடனுக்குடன் மீடியாக்களில் வருவதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்திருக்கிறது. இந்த நிலையில், இன்றைய கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை யாருக்கும் செல்போன் எடுத்துவர அனுமதியில்லை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்ததால் கோபத்துடன் கூட்டத்தை புறக்கணித்து திரும்பிச் சென்றார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதுவரை அதிமுக செயற்குழு,பொதுக்குழு போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கே இந்த முறை தடைவிதிக்கப்பட்டிருப்பது மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in