திருவள்ளூர் அருகே மோட்டர் பைக்கில் சென்ற வாலிபர் பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி!!

திருவள்ளூர் அருகே மோட்டர் பைக்கில் சென்ற வாலிபர் பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி!!

Update: 2022-07-14 22:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, ஜி.என்.செட்டி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (33). ஆரணி திமுக இளைஞர் அணியில் 9-வது வார்டு செயலாளராக இருந்த இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர், வெங்கல் அருகே தாமரைப்பாக்கத்தில் ஒரு தனியார் தொழிற்சாலை சூபர்வைசராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து வினோத்குமார் மோட்டர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பெரியபாளையம் - தாமரைப்பாக்கம் சாலை இடையே, வடமதுரை பெரிய காலனி அருகே திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வந்த போது வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சிறிய பாலம் கட்டுவதற்காக தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்காகத் தோண்டப்படும் பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகை வைக்காததே உயிர் இழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேலும் விபத்தில் உயிர் பலி ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News