அதிமுக அலுவலக சீல் விவகாரம்... இன்று பரபரப்பு உத்தரவு!!

அதிமுக அலுவலக சீல் விவகாரம்... இன்று பரபரப்பு உத்தரவு!!

Update: 2022-07-20 06:00 GMT

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் .பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த இரு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சீல் வைத்த உத்தரவை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என பதிலளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மறுநாள் விசாரணையின்போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது. போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என்று நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன.

இன்னமும் இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, வழக்கில் உத்தரவு பிறப்பிக்க தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் இன்று மதியம் 2.15 மணிக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்கிறார்.

newstm.in

Similar News