அதிமுக அலுவலக சீல் அகற்றம்.. உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி..!

அதிமுக அலுவலக சீல் அகற்றம்.. உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி..!

Update: 2022-07-21 15:39 GMT

அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி, சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்கு அனுமதிக்க வேண்டாம். அதிமுக அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்நிலையில், இன்று (21-ம் தேதி) காலை 10.55 மணி அளவில், சென்னை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெக ஜீவன் ராம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கடந்த 11-ம் தேதி வைக்கப்பட்ட சீலை அகற்றி அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் மகாலிங்கத்திடம் சாவியை ஒப்படைத்தார்.

இதையடுத்து, சி.வி.சண்முகம் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளே ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அலுவலகம் முழுவதும் பொருட்கள் சிதறி, அலங்கோலமாக காட்சி அளித்தது.


அனைத்து அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. மேஜைகள், நாற்காலிகள் நொறுக்கப்பட்டு சேதம் அடைந்திருந்தன. கம்ப்யூட்டர்களும் உடைக்கப்பட்டு இருந்தன.

கீழ் தளத்தில் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் அலுவலக அறைகளில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஆண்டு மலர் மற்றும் பொன் விழா புத்தகங்களின் ஆவணங்கள், பைல்கள் சிதறிக் கிடந்தன.

முதல் தளத்தில் தலைமை கழகத்தின் முக்கிய அலுவலகம் உள்ளது. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேஜை, கம்ப்யூட்டர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெறும் அறையில் எடப்பாடி பழனிசாமி படம் இருந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது.

2-வது தளத்தில் நூலகம் உள்ளிட்ட அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. 3-வது தளத்தில் கட்சியின் கணக்கு வழக்குகளின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை கதவு உடைக்கப்பட்டது. அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கணக்கு விவரங்களின் முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருந்தது.

அதேபோல், மற்றொரு அறையில் ஜெயலலிதாவுக்கு கட்சி சார்பில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களும், அவர் கட்சிக்கு வழங்கிய பரிசு பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த அறைகளின் கதவுகள் இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த அறையில் இருந்த பரிசு பொருட்கள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து அதிமுக அலுவலக மேனேஜர் கூறும்போது, “அலுவலகத்தின் 3-வது மாடியில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பொருட்களை காணவில்லை. கம்ப்யூட்டரில் இருந்த ஹார்ட் டிஸ்க், கணக்கு விவர ஆவணங்கள் அனைத்தும் மாயமாகி இருக்கிறது” என்றார்.

Similar News