கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி.. அதிமுக நகர செயலாளர் கைது !!

கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி.. அதிமுக நகர செயலாளர் கைது !!

Update: 2022-03-13 04:25 GMT

கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி செய்த, அதிமுக நகர செயலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. இதனையடுத்து நகைக்கடன் குறித்து ஆய்வுசெய்தப்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பதும், பல இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து நகைக்கடன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் ஆய்வு நடந்தது. அப்போது, அந்த வங்கியில் 4,537 நகைக்கடன்கள் ரூ.29.12 கோடிக்கு வழங்கியிருப்பது ெதரியவந்தது.

எனவே, ஒவ்வொரு நகைப் பொட்டலங்களையும் தனித்தனியே பிரித்து சோதித்தனர். அப்போது, கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது. இந்த போலி நகைகளின் பேரில், ரூ.2.39 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் ஏ.அசோக்குமார் பதவி பறிக்கப்பட்டது. இவர், ஆரணி நகர அதிமுக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நகர கூட்டுறவு வங்கியின் பொது ேமலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீஷ், ஊழியர் சரவணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் மோகன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதில், ஊழியர் சரவணன் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக, திருவண்ணாமலை வணிகக் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர். நகைக்கடன் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் கவரிங் நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

கவரிங் நகைகளை அடகு வைத்த 77 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நகைக்கடன் தள்ளுபடியை அனுபவிக்கும் நோக்கத்துடன், வங்கி தலைவர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைந்து கவரிங் நகையை வெவ்வேறு நபர்களின் பெயரில் போலியாக அடகு வைத்து, திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

இந்நிலையில், நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நகர செயலாளர் அசோக்குமார், கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீஷ், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


newstm.in

 

Similar News