அதிமுகவில் ஒற்றை தலைமை.. சசிகலா ரகசிய ஆலோசனை..!

அதிமுகவில் ஒற்றை தலைமை.. சசிகலா ரகசிய ஆலோசனை..!

Update: 2022-06-16 10:17 GMT

அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க, தென் மாவட்டத்தினரை களமிறக்குவது தொடர்பாக சிறுதாவூர் பங்களாவில் சசிகலா தரப்பில் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: ‘கட்சியில் ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில், பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கும், அவைத் தலைவர் அல்லது பொருளாளர் பதவியை ஓ.பன்னீர் செல்வத்திற்கும் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக, கட்சியின் 75 மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஆதரவு தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இன்னொரு பக்கம், பொதுச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால், அந்த பதவிக்கு சட்ட ரீதியாக சசிகலா உரிமை கோருகிறார்.

அதற்கு இடம் அளிக்கக் கூடாது என்பதற்காக, ‘அதிகாரமிக்க பொதுச் செயலாளர்' என்ற ஒற்றை பதவியை உருவாக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடும்படி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பொதுச் செயலாளர் அதிகாரத்தின் கீழ் செயல்படும் வகையில் கட்சி அறக்கட்டளை ஒன்று உள்ளது. அதில், 1,500 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, அந்த அறக்கட்டளைக்கு சசிகலா, அவரது உதவியாளர் ஒருவர், ஜெயலலிதாவின் உதவியாளர் ஒருவர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த அறக்கட்டளையை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாற்றவும், புதிய உறுப்பினர்களை நியமிக்கவும், கட்சி தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த, அவரது ஆதரவாளர்கள் காய் நகர்த்த துவங்கி உள்ளனர்.

அதனால், எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்க விடாமல் செய்ய, ஓ.பன்னீர்செல்வம் மூலம் சட்டரீதியாகவும், கட்சி ரீதியாகவும் சில நடவடிக்கைகளை எடுக்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர், சென்னை அருகில் உள்ள சிறுதாவூர் பங்களாவில், ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார்.

ஒற்றை தலைமை முடிவை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவருக்கு ஆதரவாக, பொதுக்குழு உறுப்பினர்களை செயல்பட வைக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் இருந்து அமமுகவினரை பொதுக்குழு கூட்டத்திற்கு அனுப்பி வைத்து, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, ஒற்றை தலைமை முடிவை கைவிட வைக்க வேண்டும் என சசிகலா தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது’ என்று அதிமுக வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Similar News