சசிகலா ஆதரவாளர் காருக்கு தீவைப்பு.. அதிமுக நிர்வாகி கைது !!

சசிகலா ஆதரவாளர் காருக்கு தீவைப்பு.. அதிமுக நிர்வாகி கைது !!

Update: 2022-04-03 09:15 GMT

சசிகலா ஆதரவாளரின் காரை தீ வைத்து எரித்த இளைஞரை போலீசார் பரமக்குடியில் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக வின்சென்ட் ராஜா என்பவர் இருந்துள்ளார். இவர் சசிகலா ஆதரவாளராக உள்ளார். இவரிடம் சசிகலா போனில் பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவர் பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தில் தார் பிளாண்ட் நிறுவனம் வைத்துள்ளார்.  அவரது நிறுவனத்தில் காரை நிறுத்திவிட்டு உறங்கியபோது 2021 ஜூன் 21 ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் கார்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் கார் முழுவதும் எரிந்துவிட்டது. அவர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றப்போதும் அது தோல்வியில் முடிந்தது.

இச்சம்பவம் குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் பரமக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்த  அதிமுக 34வது வார்டு செயலாளர் மணிகண்டன் (33) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அப்போது, மணிகண்டன் தான் வின்சென்ட் காருக்கு தீவைத்தது தெரியவந்தது. அரசியல் முன்விரோதம் காரணமாக வின்சென்ட் ராஜாவின் காருக்கு தீ வைத்ததாக மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் உடனிருந்த கூலி ஆட்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Similar News