அதிரடி! ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த அரசியல் கட்சிகள்!!
அதிரடி! ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த அரசியல் கட்சிகள்!!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக சிபிஎம், சிபிஐ, விசிக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும்படி முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்னை உள்ளிட்டவற்றால் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்க மாட்டார்கள்’ என்று தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
திமுக எடுக்கும் நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தெரிவித்துள்ளது.
newstm.in