அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.. பாஜக வலியுறுத்தல் !!

அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.. பாஜக வலியுறுத்தல் !!

Update: 2022-06-05 08:28 GMT

ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாமக கட்சி நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராக கருத்துகூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன், பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாக கருத்துகூறியிருந்தார். மேலும் பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். 

ஆனால், அதெல்லாம் பொன்னையனின் சொந்த கருத்து என ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார். ஆனால், அவர் பேசிய அதே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். அந்த வரிசையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று விமர்சித்தார். 

இதேபோல் அதிமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பலரும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜகவை விமர்சிக்கும் அதிமுக நிர்வாகிகள் மீது அக்கட்சி  தலைமை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் அரியலூரில் நேற்று கூறியதாவது, பாஜகவை விமர்சனம் செய்யும் அதிமுக நிர்வாகிகள் மீது அந்தக் கட்சியின் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு கட்சியினரும், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தால், அது திமுகவுக்குச் சாதகமாக அமைந்துவிடும்.

ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி எது என்பதைவிட, ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவதில் பாஜக தனித்து நிற்கிறது. அவ்வாறு அதிமுக செயல்படவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, என்றார்.

newstm.in

Similar News