ஒடிசா முதல்வரை சந்தித்தார் நடிகர் மாதவன்..!
ஒடிசா முதல்வரை சந்தித்தார் நடிகர் மாதவன்..!
தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற தனது மகனுடன் ஒடிசா முதல்வரை நடிகர் மாதவன் சந்தித்தார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன். இவர், சிறு வயது முதலே நீச்சலில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்தியா சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசா மாநிலத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் நடைபெற்றது.
இதில் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் பந்தய தூரத்தை 16:01.73 விநாடிகளில் கடந்து 742 புள்ளிகளை பெற்று சாதனை படைத்தார் வேதாந்த். அதன் மூலம் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், நடிகர் மாதவன் தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். அப்போது, வேதாந்த் மாதவனுக்கு டி-ஷர்ட் ஒன்றை கொடுத்து வாழ்த்தி உள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக்.
இதுகுறித்து மாதவன், “ஒடிசா முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஒடிசா மாநிலத்தை இந்திய நாட்டின் சிறந்த விளையாட்டு தளமாக உருவாக்க நீங்கள் முன்னெடுத்துள்ள உங்கள் முயற்சிக்கு நன்றி.
விளையாட்டின் எதிர்காலத்திற்காக நீங்கள் செலுத்தும் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது. உங்கள் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.