#BREAKING:- ‘அக்னிபத்’ போராட்டம்.. பற்றியெரிந்தது பாஜக அலுவலகம்..!
#BREAKING:- ‘அக்னிபத்’ போராட்டம்.. பற்றியெரிந்தது பாஜக அலுவலகம்..!
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் ‘அக்னி வீர்’ எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 முதல் 21 வயது வரை என தெரிவிக்கப்பட்டது. 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.
இதனால், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரயில்களுக்கு தீ வைத்தும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, பீகார் நவாடா மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அட்டாவா சாலையில் அமைந்துள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்குள் டயர்கள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.