சப்பாத்தி கேட்டதால் ஆத்திரம்.. இருவரை லாரி ஏற்றிகொலை செய்த ஓட்டுநர் !!

சப்பாத்தி கேட்டதால் ஆத்திரம்.. இருவரை லாரி ஏற்றிகொலை செய்த ஓட்டுநர் !!

Update: 2022-06-03 07:42 GMT

சென்னையை அடுத்த செங்குன்றம்  அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் லாரி பார்க்கிங் யார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன், நவீன் மற்றும் குமரன் ஆகிய மூன்று பேரும் லாரி பார்க்கிங் உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு நின்றிருந்த வடமாநில லாரி ஒன்றின் பின்புறம் அமர்ந்து மூன்று பேரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் லாரி ஓட்டுநரிடம் சப்பாத்தி கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் லாரி ஓட்டுநருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியிருக்கிறது.
 


இதில் ஆத்திரமடைந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால்சிங் திடீரென லாரியை பின்னோக்கி இயக்கி  3 பேர் மீதும் ஏற்றி இறக்கினார். இதில் 3 பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். மேலும் அவர்களின் பைக்கும் நசுங்கியது. இச்சம்பவத்தில் கமலக்கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நவீன், குமரன் இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனே ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் குமரன் வழியிலேயே உயிரிழந்தார். நவீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே, இருவர் லாரி ஏற்றி கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திரண்டு வந்து லாரி பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த 5க்கும் மேற்பட்ட லாரி கண்ணாடிகளை கற்கள் வீசி அடித்து உடைத்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களை அப்புறப்படுத்தி கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
newstm.in

Similar News