ஆவேசமடைந்த பயணிகள்.. அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு.. ஆவடியில் பரபரப்பு..!

ஆவேசமடைந்த பயணிகள்.. அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு.. ஆவடியில் பரபரப்பு..!

Update: 2022-02-13 04:30 GMT

சென்னை ஆவடியில் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை இயங்கி வருகிறது. அங்கிருந்து நாள்தோறும் பிராட்வே, கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அருகில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்கின்றனர்.


இந்த நிலையில், இன்று காலை திடீரென பேருந்து பணிமனை வாசலில் கூடிய பயணிகள், பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை.

சரியான நேரத்திற்கு வருவதில்லை என குற்றம்சாட்டி அவ்வழியே வந்த அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அத்துடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பயணிகள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News