517 தேர்தல் வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

517 தேர்தல் வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

Update: 2022-02-18 04:55 GMT

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் அவர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு முதல்வர் தனது அலுவலகத்தில் இருந்து காணொலி மூலமாக பிரசாரம் செய்து வருகிறார். அவரே தனது ஆட்சிக்கு 100-க்கு 100 மதிப்பெண் கொடுத்தும், நல்லாட்சி நடைபெறுவதாகவும் கூறி வருகிறார். மேலும் உள்ளாட்சியிலும் அவரது ஆட்சியே தொடரும் என்றும் சொல்லிக்கொள்கிறார். ஆனால் களத்தில் வந்து பார்த்தால்தான் மக்கள் கோபத்தில் உள்ளது தெரிகிறது.

517 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த திமுக அதில் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.1,000 கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் குடும்பத் தலைவிகளின் கணக்கெடுப்பு பணி நடந்து வருவதாக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் கூறினார்.

குடும்பத் தலைவி யார்? என்று கணக்கெடுப்பதற்கே 8 மாதங்கள் ஆகிறதா? 8 மாதங்களாக ஒரு காதில் பூவை சுற்றி விட்டு, தற்போது மற்றொரு காதில் திமுகவினர் பூவை சுற்ற பார்க்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போது நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறினார்கள். ஆனால் தற்போது 73 சதவீதம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என்று அறிவித்து உள்ளது இந்த விடியல் அரசு.

இந்த விடியாத அரசு வழங்கிய 21 வகை பொங்கல் தொகுப்பில் ஒரு பொருட்களையாவது பயன்படுத்தும் வகையில் கொடுத்தார்களா?  முதல்வர் வழங்கிய மஞ்சள் பையின் விலை ரூ.60 என்றால் நம்பமுடிகிறதா? எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Similar News