எதிர்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!!

எதிர்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!!

Update: 2022-07-18 04:25 GMT

குடியரசுத் துணைத் தலைவராக உள்ள பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 20-ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 22 கடைசி தினம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆகஸ்ட் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கு பின் வேட்பாளரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்தார். அதன்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூர்வை சேர்ந்த மார்கரெட் ஆல்வா, கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றியிருக்கிறார். அதற்கு முன்பாக, ஒன்றிய அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா இருந்திருக்கிறார்.

1974-ல் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான அவர், அதன் பிறகு 1980, 1996, 1992 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்திரா அமைச்சரவையில் 1984-85 வரை இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சராகவும் ராஜீவ் அமைச்சரவையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News