மற்றொரு சோகம்.. தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி
மற்றொரு சோகம்.. தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி
கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.
நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேர்த்திருவிழா நடைபெற்றது. தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு தேரின் வேகத்தை கட்டுப்படுத்த முட்டுக்கட்டை போடும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். அப்போது, திடீரென தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்கிற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் அமைக்கப்பட்டது.
இங்கு கடந்த 26ஆம் தேதி காலையில் தேர்த்திருவிழா தொடங்கியது. தேரின் பின்பகுதியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு அதன்மூலம் தேருக்கு மின்சார வசதி செய்யப்பட்டு இருந்தது. தேரை திருப்பியபோது பின்னால் வைக்கப்பட்டு இருந்த ஜெனரேட்டரின் எடை அதிகமாக இருந்ததால் தேரை சரியான நிலையில் திருப்ப முடியாமல் போனது. இதனால் தேர் ஒருபக்கமாக இழுக்க தொடங்கியது.
அந்த நேரத்தில் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதன் காரணமாக தேர் மீது மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
newstm.in