அரசு ஆஸ்பத்திரியில் கலைஞர் உணவகம்.. அதிமுக கடும் எதிர்ப்பு..!
அரசு ஆஸ்பத்திரியில் கலைஞர் உணவகம்.. அதிமுக கடும் எதிர்ப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியின் முதல் கூட்டம் நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர், ஒப்பந்த குழு உறுப்பினர் மற்றும் நியமன குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தில் ஒன்றாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கலைஞர் உணவகம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு அதிமுக உறுப்பினர் கவியரசன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். “ஏற்கனவே, கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகத்தின் கிளை தொடங்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதன் நிலை என்ன..?” எனக் கேட்டு, அதன் திறப்பு விழா புகைப்படத்தை காண்பித்து பேசினார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையர் ராஜராம், “அது, தற்காலிகமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்காக தொடங்கப்பட்டது.
அரசு விதிமுறையின் படி, நகராட்சியில் ஒரு அம்மா உணவகம் மட்டும் தான் செயல்பட முடியும், அது, ஏற்கனவே பார்க் சாலையில் செயல்பட்டு வருகிறது.
எனவே தான் அரசு மருத்துவமனையில் கலைஞர் உணவகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.