டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் படைத்த புதிய சாதனை !!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் படைத்த புதிய சாதனை !!

Update: 2022-03-06 18:09 GMT

இலங்கை அணிக்கு எதிராக மொஹாலி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்திய பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கபில் தேவின் சாதனையை முறிடித்துள்ளார்.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 357/6 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 129.2 ஓவா்களில் 574/8 ரன்களை குவித்திருந்த போது கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தார்.

ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 228 பந்துகளில் 3 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 175 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் லக்மல், விஷ்வா பொ்ணான்டோ, எம்புல்டெனியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னர், முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்கள் எடுத்திருந்தபோது ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார். 

அடுத்து இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா பந்துவீச்சிலும் இலங்கையை திணறடித்தார். அஸ்வின், ஜடேஜா சுழல்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் பெவிலியன் திரும்பிய வண்ணமிருந்தனர். இறுதியாக, 178 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணி ஆல் அவுட்டானது.  

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் சாதனை ஒன்றை படைத்துள்ளார். 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் இதுவரை 435 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். 132 போட்டிகளில் விளையாடிய கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கபில் தேவின் சாதனையை அவர் முறிடித்துள்ளார். டெஸ்ட் வரலாற்றிலேயே, இதுவரை நான்கு இந்தியர்கள்தான் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். கடந்தாண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங் சாதனையை அஸ்வின் முறியடித்திருந்தார்.
 

newstm.in

Tags:    

Similar News