நாளை தொடங்குது சட்டமன்ற கூட்டத்தொடர்.. முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார்..!

நாளை தொடங்குது சட்டமன்ற கூட்டத்தொடர்.. முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார்..!

Update: 2022-04-05 11:50 GMT

தமிழக சட்டமன்றத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி 2022 - 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (19-ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு பட்ஜெட் மீதும் 24-ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டது. அமைச்சர்களின் பதில் உரைக்கு பின் சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தி, துறைகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு ஒப்புதல் பெற நாளை (6-ம் தேதி) முதல் மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. நாளை, நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.

அதன்பின், ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் மே 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. விடுமுறை நாட்கள் போக, மொத்தம் 22 நாட்கள் விவாதம் நடக்கும்.

இதில் சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, திமுக தேர்தல் வாக்குறுதிகள் என, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, மானிய கோரிக்கை விவாதத்தில் அனல் பறக்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கை விவாதம் நிறைவடைந்ததும், அந்த துறை அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். அத்துடன், சட்டசபை 110வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை ஒட்டி, தலைமைச் செயலகத்தில் நேற்று நீர்வளத் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.

அத்துடன், கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள், நடப்பு நிதியாண்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி, தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

Similar News