ஒகேனக்கல் மக்களே கவனம்.. காவிரியில் வெள்ளப்பெருக்கு..!
ஒகேனக்கல் மக்களே கவனம்.. காவிரியில் வெள்ளப்பெருக்கு..!
கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வரும் நீரின் அளவு கூடுவதும் குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக இரு அணைகளும் நிரம்பி உள்ளது.
இதனால், இந்த இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர் வரத்து மேலும் அதிகரித்து இன்று மாலை 2 மணி நிலவரப்படி 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும், ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.