ஆட்டோ கட்டணம் உயர்கிறது… நீதிமன்றம் அதிரடி!!
ஆட்டோ கட்டணம் உயர்கிறது… நீதிமன்றம் அதிரடி!!
பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த 2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பிரிண்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அதை பொருத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை என்றும், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகளிடம் தங்கள் விருப்பம் போல கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, மீட்டரை செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பெட்ரொல் - டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
newstm.in