கோடி கணக்கான மதிப்புடைய சிலைகளை விற்க முயன்ற பாஜக மாவட்ட செயலாளர்..!!
கோடி கணக்கான மதிப்புடைய சிலைகளை விற்க முயன்ற பாஜக மாவட்ட செயலாளர்..!!
ராமநாதபுரம் மாவட்டம் முகுக்குளத்தூர் பகுதியில் தொன்மை வாய்ந்த சிலைகளை சிலர் விற்க முயற்சிப்பதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், தொன்மை வாய்ந்த சிலைகளை விற்க முயன்ற ஒருவர் கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், இவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து தன்னிடம் 7 தொன்மை வாய்ந்த சிலைகள் இருப்பதாகவும், அருப்புகோட்டை காவலர் இளங்குமரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர் இளங்குமரன் மற்றும் கருப்புசாமி ஆகியோரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாக நரேந்திரன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த கணேசன் மற்றும் விருது நகரை சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் சேலம் எடப்பாடி அருகே உள்ள ஒரு மலை அடிவார கிராமத்தில் சிலைகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்றதாகவும், தாங்கள் நால்வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எனக்கூறி தொன்மையான 7 சிலைகளை பறித்து கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பறிக்கப்பட்ட சிலையை ராமநாதபுரம் மாவட்டம் கூரிசேத்தனார் அடுத்த அய்யனார் கோவிலின் பின்புறம் உள்ள கால்வாயில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலைகளை பாஜக பிரமுகரான அலெக்சாண்டரிடம் கொடுத்து 5 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கால்வாயில் மறைத்து வைத்திருந்த 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 1.5 அடி உயரமுள்ள நாககன்னி சிலை, 1 அடி உயரமுள்ள காளி சிலை, 3/4 அடி உயரமுள்ள முருகன் சிலை, 1/2 அடி உயர விநாயகர் சிலை, 1/2 நாக தேவதை சிலை ஆகிய 7 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகள் எந்த கோவிலை சேர்ந்தது எனவும் சிலைகளின் தொன்மை குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் மற்றும் கணேசன் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.