குட்கா கடத்திய பாஜக நிர்வாகி.. கண்டுபிடித்தது பறக்கும்படை.. கைது செய்தது காவல்துறை..!
குட்கா கடத்திய பாஜக நிர்வாகி.. கண்டுபிடித்தது பறக்கும்படை.. கைது செய்தது காவல்துறை..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, துறையூர் பாலக்கரை பகுதியில் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனை செய்தனர். அவர் வந்த வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் திருச்சி மாவட்டம் ஒ.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்குமார் (37) என்பதும், அவர் பாஜக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருவதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து, குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.