தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு பாஜக நிர்வாகி கடும் எதிர்ப்பு..!!
தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு பாஜக நிர்வாகி கடும் எதிர்ப்பு..!!
குஜராத்தை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஷாமா. எம்.எஸ். பல்கலைக் கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்ற இவர், தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வருகிற 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இவர் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள உள்ளதுதான்.
இயல்பாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, நகை, ஜவுளி உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி உள்ளார். மேலும் திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் என அனைவருக்கும் ஷாமா அழைப்பும் விடுத்துள்ளார். ஆனால் திருமணத்தில் இவரே மணப்பெண், மணமகன் என்பது தான் வியப்பு. தன்னை தானே ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளப் போகும் நிகழ்வு குஜராத்தில் இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து மணப்பெண் ஷாமாவிடம் கேட்டபோது, “சிறு வயதில் இருந்தே திருமணத்தில் பெரிய ஈடுபாடு இல்லாததால், திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்து கொண்டிருந்தேன். திருமண பந்தம் என்னைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இருப்பினும் என்னை மணப்பெண்ணாக பார்க்க வேண்டும் என்று என்ற ஆசை என்னுள் எழுந்தது. அதற்கும் ஒரு காரணம் உண்டு. வெப்சீரியஸ் ஒன்றை நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் நடிகை ஒருவர், எனக்கு மணப்பெண்ணாகத்தான் ஆசையே தவிர மனைவியாக அல்ல என்று கூறியிருப்பார்.
இதை கேட்டதும் எனக்குள்ளும் என்னை நானே மணப்பெண்ணாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்ததால், என்னை நானே திருமணம் செய்து கொள்ள உள்ளேன். இதற்கு சோலோகேமி என்று பெயர். ஆன்லைன் மூலம் இதுபோன்று இந்திய பெண்கள் யாராவது திருமணம் செய்து கொண்டார்களா என்பது குறித்து தேடிப்பார்த்தேன். ஆனால் எந்த தகவலும் இல்லை. எனவே இது தான் முதல் முறை என்பதில் பெருமை அடைகிறேன். இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய பெற்றோரும் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் இரட்டி மகிழ்ச்சி எனக்கு. எனது மெஹந்தி நிகழ்ச்சி வருகிற 9-ம் தேதியும், அதைத்தொடர்ந்து திருமணம் ஜூன் 11-ம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெற உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்துகொள்வதற்கு பாஜகவின் நகரப் பிரிவு தலைவர் சுனிதா சுக்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பிந்துவுக்கு மனநலம் சரியில்லை. இந்து கலாச்சாரத்தில் ஒரு ஆண் ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண் ஒரு பெண்ணையோ திருமணம் செய்துகொள்ளலாம் என்று எங்கும் எழுதப்படவில்லை.
இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானவை. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். கோவில் புனிதமான இடம், இது போன்ற திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.