“தமிழக மக்களை ஒருபோதும் பாஜகவால் ஆள முடியாது” : விளாசிய ராகுல் காந்தி!!

“தமிழக மக்களை ஒருபோதும் பாஜகவால் ஆள முடியாது” : விளாசிய ராகுல் காந்தி!!

Update: 2022-02-03 06:30 GMT

மத்திய பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவில் மக்களாட்சி நடக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மன்னர் ஆட்சியை கொண்டு வருகிறார்கள் என விமர்சித்தார்.

மேட் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவற்றைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கும்வேளையில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. எனது கருத்துக்களை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல், அக்கறையுள்ள குடிமகனின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Full View

குடியரசுத் தலைவர் உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய இளைஞர்கள் வேலை கேட்கிறார்கள். ஆனால் உங்கள் அரசால் வேலை கொடுக்க முடியவில்லை. 2021-ல் மூன்று கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

 ‘1947ல் அடித்து நொறுக்கப்பட்ட மன்னர் ஆட்சியை தற்போது மீண்டும் ஆளும் பாஜக கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. கூட்டாட்சி என்பது அதன் அர்த்தம்.

தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர் அவரது தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல எனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி.

Full View

இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது, நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது வாழ்நாளில் ஒரு போதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது.

அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

Similar News