#BREAKING:- உடலை பெற்றுக்கொள்கிறோம்.. மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் கோர்ட்டில் தகவல்..!
#BREAKING:- உடலை பெற்றுக்கொள்கிறோம்.. மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் கோர்ட்டில் தகவல்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் ஒப்படைப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, மாணவி உடல் கூறாய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கைகளை 3 மருத்துவர்கள் அடங்கிய குழு ஆராய வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஜிப்மரில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் தாமதம், ஒவ்வொரு முறையும் ஏன் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள் எனவும் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு கேள்வி எழுப்பப்பட்டது.
மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர், அது பெற்றோருக்கு தெரியாமல் நடந்துள்ளது என்றும் நீதிபதி சதீஷ்குமார் கூறியிருந்தார்.
இதையடுத்து, நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், உடலை பெற்றுக் கொள்வது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்கு விளக்கம் அளிக்க மாணவி தந்தை தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மாணவியின் உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை நடத்துங்க, மகளின் ஆன்மா இளைப்பாறட்டும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளை பெற்றுக் கொள்வதாக அவருடைய பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவியின் உடலை நாளை காலை 6 முதல் 7 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்; இறுதிச்சடங்கை நாளைக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.
மாணவி ஸ்ரீமதியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சுமார் 10 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.