பஜாஜ் ஷோரூமில் தீ விபத்து.. பலகோடி ரூபாய் மதிப்பிலான பைக்குகள் சேதம்..!
பஜாஜ் ஷோரூமில் தீ விபத்து.. பலகோடி ரூபாய் மதிப்பிலான பைக்குகள் சேதம்..!
கரூரில், பஜாஜ் பைக் ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் எரிந்து நாசமானது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் - கோவை நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பஜாஜ் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த கடைக்கு அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு 3 வாகனங்களில் விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், ஷோரூமில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.