ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!
ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!
பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது.பிளாஸ்டிக் பைகளானவை எளிதில் மட்கும் தன்மை அற்றவை. ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகளாகும்.
பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்நிலையில், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தடைவிதிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021, ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை ஜூலை 1-ம் தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
உதாரணமாக பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்டிரா, ஸ்பூன் போன்றவையும் இந்த தடையில் அடங்கும். இவை தவிர, பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பி.வி.சி. பேனர்கள் ஆகியவையும் அடங்கும்.
அதனால், ஜூலை 1-ந் தேதிக்கு முன்னர் வணிகர்கள் இந்த பொருட்களின் இருப்பை பூஜியம் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது. அதனையும் மீறி இந்த பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதனால் மாஸா, ப்ரூட்டி உள்பட குளிர்பானங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி ஸ்ட்ராவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளிர்பான நிறுவனங்கள் பிளாஸ்டிக் தடையை வரவேற்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் 6 முதல் 8 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்த மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்பதில் மட்டும் உறுதியாக உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேப்பரில் ஆன பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் குளிர்பான நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பித்தக்கது