உஷார் மக்களே..!! வெறும் 44 நாட்களில் ரூ.1.36 கோடி அபராதம் வசூல் செய்த போலீசார்..!!
உஷார் மக்களே..!! வெறும் 44 நாட்களில் ரூ.1.36 கோடி அபராதம் வசூல் செய்த போலீசார்..!!
இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது. அந்தவகையில், இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், 23.05.2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னையில் ஹெல்மெட் விதிமீறல்கள் தொடர்பாக கடந்த 44 நாட்களில் மட்டும் ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் ஹெல்மெட் அணிவதை தீவிரபடுத்தும் விதமாக கடந்த மே 23-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையில் சென்னை பெருநகரில் மேற்கொண்ட தீவிர வாகன சோதனையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 72,744 வாகன ஓட்டிகள் மீதும், பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 நபர்கள் மீதும் என மொத்தம் 1,36,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் வாகன ஓட்டிகளிடம் 72 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னால் அமர்ந்து சென்றோரிடம் 63 லட்சத்து 91 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமும் என மொத்தம் ரூ.1,36 கோடி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.