கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடலுறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யும்படியும் கீழமை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அந்தப் பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துவிட்டது.

அதேவேளை, கணவன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து செய்யப்படவில்லை என்ற போதிலும், மனைவியை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்வது குற்றம் என்ற கோணத்தில் இது பார்க்கப்படவில்லை என்றது.

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி நாக பிரசன்னா, “ஆண், ஆண் தான்; சட்டம் சட்டம் தான். பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை தான்.

கணவனாக ஆண் மனைவியான பெண் மீது பாலியல் வன்கொடுமை செய்தால் அது பாலியல் வன்கொடுமை தான். பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு என்றால், அது ஆணுக்கு தண்டனை உண்டு தான். அந்த ஆண் கணவனாக இருந்தாலும் சரி.

பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட ஆண்களுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளோ, உரிமமோ திருமண அமைப்பு வழங்காது, வழங்கவில்லை, வழங்கவும் கூடாது” என்றார்.

Tags: