கோவை வானொலிக்கு குண்டு மிரட்டல்.. தீவிர ரசிகருக்கு போலீஸ் வலை..!
கோவை வானொலிக்கு குண்டு மிரட்டல்.. தீவிர ரசிகருக்கு போலீஸ் வலை..!
எம்ஜிஆர் பாடல் ஒலிபரப்பாத கோவை ஆல் இந்தியா ரேடியோ நிலையத்தைக் கண்டித்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீவிர ரசிகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை - திருச்சி சாலை ராமநாதபுரத்தில் ஆல் இந்திய ரேடியோ நிலையம் உள்ளது. இந்த ரேடியோ நிலையத்திற்கு ஒரு தபால் கார்டு வந்துள்ளது. அதில், ‘ரஜினிகாந்த் பிறந்த நாளன்று ரஜினி பாடல்களை ஒலிபரப்பினீர்கள்.
ஆனால், எம்ஜிஆர் பிறந்த நாளன்று எம்ஜிஆர் பாடலை ஏன் ஒலிபரப்பவில்லை..? இதனைக் கண்டித்து, ரேடியோ நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசுவோம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கார்டை பார்த்த ரேடியோ நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், அந்த கார்டை கைப்பற்றியதுடன், ரேடியோ நிலையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்துடன், தபால் கார்டு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தீவிர எம்ஜிஆர் ரசிகர் என்றும், அவர் யார்? என்று தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.