தயக்கத்தை தகர்த்தெறியுங்கள்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தயக்கத்தை தகர்த்தெறியுங்கள்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Update: 2022-02-09 05:10 GMT

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “திமுக அரசின் திட்டங்கள் உள்ளாட்சி வரை ஊடுருவி, ஒவ்வொரு ஊரிலும் உள்ள குடும்ப நபர்கள் பயன் பெற்று மகிழ்ந்திட வேண்டும்.

இந்த உன்னத நோக்கமே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் நமக்கான இலக்கு. ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, வெற்றியை உறுதி செய்யும் பிரச்சாரம் மேற்கொள்கிற நேரம் இது.

மக்கள் பார்வையிடும் குடும்ப, வாட்ஸ் அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் பிரச்சாரத்தை கச்சிதமாக பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாத போது, உண்மையை பேச நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்..? தயக்கத்தை தகர்த்தெறிந்து, உண்மையான செய்திகளை உரக்கச் சொல்லி எல்லாருக்கும் கொண்டு சேர்ப்போம்.

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோரின் வாய் ஜால சதியை முறியடித்து, நம் சாதனையை பரப்புவோம். சாதனைகளால் நிரம்பிய வாட்ஸ் அப் செய்திகள் நூறாக, ஆயிரமாக, லட்சங்களாக பகிரப்படும்போது, அது வெறும் வாட்ஸ் அப் செய்தியன்று; திமுகவுக்கு ஆதரவு பெருக்கிடும் ஓட்டுகளுக்கான அச்சாரம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில், ஓட்டு சேகரிக்கும் பணியில் இருக்கும் ஒவ்வொரு தொண்டரும் இதை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் களப் பணியாற்றுங்கள்.

கூட்டணி கட்சியினருடன் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்றுங்கள். மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவர்” என்று கூறியுள்ளார்.

Similar News