இலவச மின் இணைப்புக்கு லஞ்சம்.. மதுரை விவசாயிகள் குமுறல்..!
இலவச மின் இணைப்புக்கு லஞ்சம்.. மதுரை விவசாயிகள் குமுறல்..!
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில், விவசாயத்திற்கு 5 எச்.பி. திறனுள்ள மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், மின் இணைப்புக்கு மனு செய்து 17 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு வழங்காமல், அதன் பிறகு மனு கொடுத்தவர்களுக்கு மின்சாரம் வழங்க, மின் கம்பங்களை நட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து எட்டிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பையா கூறியதாவது: “2004-ம் ஆண்டு ஆழ்குழாய் அமைத்து, தேவையான ஆவணங்களை மின்வாரிய அலுவலகத்தில் கொடுத்துள்ளேன்.
2021-ல் மின் இணைப்பு தர உள்ளதால் தயார் நிலையில் இருக்கும்படி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பதிவு தபால் வந்தது. ஆனால், இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை.
அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, அலுவலகம் எதிரே உள்ள கணினி மையத்தில் 15,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் இணைப்பு கொடுக்கப்படும் என்கின்றனர்.
இதுகுறித்து, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு வரிசைப்படி மின் இணைப்பு வழங்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறையினரும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து மின் உதவி பொறியாளர் நாக திருத்தணி கூறுகையில், “விவசாயிகள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இலவச மின் இணைப்பு குறித்து விவசாயிகள் என்னை நேரில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.