எலெக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது பற்றி எரிந்த தீ.. தந்தை, மகள் உயிரிழந்த சோகம் !!
எலெக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது பற்றி எரிந்த தீ.. தந்தை, மகள் உயிரிழந்த சோகம் !!
எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தால், தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாறாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் துரைவர்மா (49). இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கி இருந்தார். மூன்று நாட்களும் அவ்வப்போது சார்ஜ் போட்டு வாகனங்கள் இயக்கிவந்தார். இந்நிலையில், துரைவர்மா தனது புதிய எலெக்ட்ரிக் பைக்கை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது, திடீரென பைக் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட புகை வீடு முழுவதும் சூழ்ந்தது.
இதில் துரைவர்மாவும், அவரின் மகள் 13 வயதுடைய மோகனபிரீத்தியும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றபோது அவை தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலெக்ட்ரிக் பைக் எரிந்து அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in