மிகவும் கீழ்த்தரமான மிமிக்ரி.. ஆடியோ குறித்து சி.பொன்னையன் விளக்கம்..!
மிகவும் கீழ்த்தரமான மிமிக்ரி.. ஆடியோ குறித்து சி.பொன்னையன் விளக்கம்..!
அதிமுக மூத்த உறுப்பினர் சி.பொன்னையன், கன்னியாகுமரி நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் போனில் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார்.
அதில், ‘தலைவர் காலத்திலிருந்து கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியின் நிலையை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. தொண்டர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும்’ என, சி.பொன்னையனிடம் கோலப்பன் கூறுவது போல் உள்ளது.
அதற்கு சி.பொன்னையன், ‘ஒன்றும் ஆகாது. தொண்டர்கள் இரட்டை இலை பின்னாலும், தலைவர்கள் பணம் பின்னாலும் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் செல்கிறார்.
கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். ஒரு மாதத்திற்கு 2 கோடி ரூபாய் வருமானம் வரும் அளவில் கே.பி.முனுசாமி துரைமுருகனிடம் இருந்து குவாரி டெண்டர் பெற்று விட்டார். திமுகவை நாம் திட்டுவதே இல்லை, அண்ணாமலை தான் திட்டி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி, சிறைச்சாலை சென்றாலும் பரவாயில்லை என ஸ்டாலினை திட்டி வருகிறார். அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
சி.வி.சண்முகம் அப்பாவும், நானும் சட்டக் கல்லூரியில் வகுப்பு தோழர்கள். சி.வி.சண்முகம் பகலில் குடிக்கும் பழக்கம் உடையவர். பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் நாய் கத்துவது போல் கத்துகிறார்.
எடப்பாடி பழனிசாமியையும் ஓரங்கட்ட தயாராகி வருகின்றனர். பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என எடப்பாடி பழனிசாமி முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விசுவாசமாக இல்லை’ கூறுவது போல் உள்ளது.
இந்த ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அந்த பேச்சு என்னுடையது அல்ல” என்று சி.பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அந்த ஆடியோவில் பேசியிருப்பது நான் அல்ல. மிகவும் கீழ்த்தரமான முறையில் மிமிக்ரி செய்து ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
நான் இருக்கும் உயரிய இடத்திற்கு எந்த காண்டாமிருகத்திடமும் இப்படி பேச வேண்டிய அவசியமில்லை. எதிரிகளைப் பற்றிக் கூட நான் இவ்வாறு பேச மாட்டேன். அப்படி இருக்கையில், என் நண்பர்களைப் பற்றி நான் இவ்வாறு பேசி இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு.
இப்படி மோசடி செய்தவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு இந்த மிமிக்ரி ஆடியோவை வெளியிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.