அமைச்சரவை அதிரடி மாற்றம்.. 24 அமைச்சர்கள் ராஜினாமா..!
அமைச்சரவை அதிரடி மாற்றம்.. 24 அமைச்சர்கள் ராஜினாமா..!
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன.
இந்நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
அத்துடன், ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு வசதியாக, தற்போது அமைச்சர்களாக உள்ள 24 பேர் ராஜினாமா செய்கின்றனர்.
இதற்கிடையில், டெல்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உட்பட பலரை சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள், நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து விவாதித்தார்.
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஜெகன், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தனை நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, வரும் 11-ம் தேதி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஜெகன் கோரிக்கை விடுத்தார். அமராவதியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அப்போது, அமைச்சர்களிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் பெறப்பட உள்ளது. இதனை தொடர்ந்து நாளை (8-ம் தேதி) புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு வரும் 11-ம் தேதி பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.