கால் டாக்சி டிரைவர் எரித்துக் கொலை.. காவலர் கள்ளக் காதலியிடம் விசாரணை..!

கால் டாக்சி டிரைவர் எரித்துக் கொலை.. காவலர் கள்ளக் காதலியிடம் விசாரணை..!

Update: 2022-06-10 16:20 GMT

சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (26). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். அத்துடன், கால் டாக்சியும் ஓட்டி வந்தார். அவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 1-ம் தேதி ரவி தனியாக வீட்டில் இருந்தபோது, கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாகக் கூறி மூன்று பேர் ரவியை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ரவியின் மனைவி ஐஸ்வர்யா இந்த தகவலறிந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது, அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 4-ம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலைய போலீஸ்காரர் செந்தில்குமார் என்பவர் அவருடைய காதலியுடன் வசித்து வந்ததாகவும், செந்தில்குமாருடன் இணைந்து தனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் குழந்தை ஜெசிகா, செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால், செந்தில்குமாரின் குடும்பத்தோடு தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை கொலை செய்துவிடுவதாக செந்தில்குமார் மிரட்டியதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

தனது கணவர் காணாமல் போன அந்த நாளே செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது கணவரை செந்தில்குமார் கடத்திச் சென்றிருப்பதாக சந்தேகிப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் காணவில்லை என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ்காரர் செந்தில்குமார் வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த 28-ம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த கே.கே நகர் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன இருவரின் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம் என காண்பித்து பின்னர் செல்போன் எண் ஸ்விட்ச் ஆகியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் உடல் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் அந்த உடலை மீட்டுள்ளனர்.

அது, காணாமல் போன ரவியின் உடலா என முழுமையாக உறுதிசெய்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், செந்தில்குமாரின் காதலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அது ரவியின் உடல் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கே.கே.நகர் கால் டாக்சி ஓட்டுநர் ரவி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ்காரர் செந்திலின் கள்ளக்காதலி கவிதாவை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News