சென்னையில் ஏடிஎம்மை கொள்ளையடிப்பதற்காக கால் டாக்ஸி ஓட்டுநர் படுகொலை..!!
சென்னையில் ஏடிஎம்மை கொள்ளையடிப்பதற்காக கால் டாக்ஸி ஓட்டுநர் படுகொலை..!!
சென்னை சோழிங்கநல்லூரை அருகே உள்ள அரசன்கழனி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (30). ஓலா நிறுவன கால் டாக்ஸி ஓட்டுநரான இவர், மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு வல்லம் அருகே சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் 5 தனிப்படை அமைத்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கார் புக்கிங் செய்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான பெரம்பலூர் மாவட்டம் கரியனூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அந்த வேலையில் சரிவர ஊதியம் கிடைக்காததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள பலாப்பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது தனது ஊர்க்காரர்களான திருமூர்த்தி, கட்டிமுத்து ஆகியோருடன் சேர்ந்து விழுப்புரம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க திட்டம் தீட்டி உள்ளனர். கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் செல்ல இவர்களுக்கு கார் தேவைப்பட்டதால் தாம்பரம் மெப்ஸ்ஸில் இருந்தபடி கால் டாக்ஸி கார் புக் செய்துள்ளனர்.
அப்போதுஅவர்களை ஏற்றி சென்ற காரை அர்ஜூன் ஓட்டி வந்துள்ளார். அப்போது, காரில் ஏறிய அவர்கள் செங்கல்பட்டு வந்ததும் அர்ஜுனை காரை விட்டு இறங்கி ஓடுமாறு கூறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள், அர்ஜூனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரது காரில் தப்பியோடி உள்ளனர்.
பின்னர் அந்த காரை மேல்மருவத்தூர் அருகே நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி 5 பேரும் தப்பி சென்று வழக்கம் போல தங்களது ஊரில் பதுங்கினர். இதனிடையே, அங்கு சென்ற தனிப்படை போலீசார் மூவரையும் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். ஏடிஎம்மை கொள்ளையடிப்பதற்காக காரை திருட முயன்ற போது, கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காக ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்ற வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி 2 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.