தமிழகத்தில் இனி ஒட்டக இறைச்சி கிடைக்காது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் இனி ஒட்டக இறைச்சி கிடைக்காது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Update: 2022-04-15 10:59 GMT

தமிழகத்திற்கு சட்டவிரோதமாக ஒட்டகங்களை கொண்டு வந்து வெட்டக் கூடாது; மீறி வெட்டினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு சட்டவிரோதமாக ஒட்டகங்களை கொண்டு வருவதையும், வெட்டுவதையும் தடுக்க உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி  அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு, அவைகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒட்டகங்கள் வெட்டப்படுவது இல்லை. ஒட்டகங்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியது.

அதை ஏற்று வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு வெட்டப்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.

மீறி  ஒட்டகங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து வெட்டினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Similar News