வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை.. ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்..!

வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை.. ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்..!

Update: 2022-04-05 14:27 GMT

தமிழகம் முழுவதும் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த  3 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவை ஆயுதப் படையில் காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ்குமார் என்பவர் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து கோவை சென்ற தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள கணேஷ் குமாரின் வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது, வீட்டில் இருந்து சிறிதளவு கஞ்சா மற்றும் சில பொருட்களை கைப்பற்றியதுடன் கணேஷ் குமாரை கைது செய்து புதுக்கோட்டை கூட்டிச் சென்றனர்.

இந்நிலையில், கணேஷ் குமாரை கைது செய்திருப்பது தொடர்பான ஆவணங்களை கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமாரிடம் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை காவலர் கணேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

Similar News