உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் உள்ள தேலா ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் ராம்நகருக்கு பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வந்தனர். ராம்நகரில் உள்ள ஆற்றை கடக்கும் முன் எதிர்பாராவிதமாக அவர்கள் வந்த கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் இருந்தவர்களில் 3 ஆண்கள், 6 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் பத்திரமாக மீட்கப்பட்டதாக ராம்நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றில் கவிழ்ந்த கார் கிரேன் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான கார் எர்டிகா எனத் தெரிய வந்துள்ளது. இந்த காரில் மொத்தம் 10 பேர் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்பட்டது. மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மக்கள் சிலர் விபத்துக்குள்ளான காரில் இருந்து ஒரு பெண்ணை மீட்க உதவி செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வழக்கில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரகாண்ட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

Tags: