மாஜி அமைச்சர் சி.வி சண்முகம் மீது வழக்குப் பதிவு.. வீடு முன்பு திரண்ட தொண்டர்களால் பரபரப்பு..!
மாஜி அமைச்சர் சி.வி சண்முகம் மீது வழக்குப் பதிவு.. வீடு முன்பு திரண்ட தொண்டர்களால் பரபரப்பு..!
‘ஜனநாயகத்தை பாதுகாக்க முயன்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொய் வழக்கில் கைது செய்திருப்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று கூறி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘அதுபோல எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தனர்.
ஆனாலும், வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து, திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு இரவு முழுவதும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து நின்றிருந்தனர். இதனால், பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.