2 மாணவிகளை காவு வாங்கிய காவிரி.. பாட்டி வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்...!

2 மாணவிகளை காவு வாங்கிய காவிரி.. பாட்டி வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்...!

Update: 2022-06-10 17:45 GMT

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த சேத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள்(70 ). இவருடைய மூத்த மகன்கள் அறிவுச் செல்வன்; இளைய மகன் அன்புச் செல்வன். இவர்கள் இருவரும், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.

அறிவுச் செல்வன் மகள் சுசித்ரா (11). இவர், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். அன்புச் செல்வன் மகள் சசிரேகா(6). இவரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் இவர்கள் இருவரும் சேத்துக்குளியில் உள்ள பாட்டி பாப்பாத்தி அம்மாள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (10-ம் தேதி) பாப்பாத்தி அம்மாள் தனது பேத்திகள் சுசித்ரா மற்றும் சசிரேகா ஆகியோருடன் அங்குள்ள காவிரி ஆற்றில் துணி துவைக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் இருவரும் திடீரென நீரில் மூழ்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறையை கழிக்க பாட்டி வீட்டுக்கு சென்ற பள்ளி மாணவிகள் 2 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News