அரசு பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு.. கொள்ளையர்களுக்கு தானே நடந்த விபரீதம் !!
அரசு பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு.. கொள்ளையர்களுக்கு தானே நடந்த விபரீதம் !!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த நட்சத்திர பிரேமிக (39) என்ற பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு பணி முடித்து இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் தக்கலை, மூலச்சல் வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் இரு இளைஞர்கள் சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாத சாலையில் நட்சத்திர பிரேமிக கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரேமிக, படுகாயங்கைளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே இரு இளைஞர்கள் சென்ற பைக் விபத்தில் சிக்கியது. இதில் சஜாத் என்பவர் உயிரிழந்த நிலையில், கமல் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்நபரிடம் தாலிச்செயின் இருப்பதை அறிந்த திருவனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியில் வைத்து பிரேமிக-விடம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு கேரளாவிற்கு தப்பிச் சென்ற நிலையில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கேரளாவிற்குச் சென்ற தக்கலை போலீசார் 11 சவரன் தாலிச் சங்கிலியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in