12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை !!
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை !!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி பல இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. ஆனால், பல்வேறு இடங்களில் மழையும் பெய்கிறது. நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் இன்று (மே 26) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டி இருக்கும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 9 செமீ, அரியலூரில் 6 செமீ, பெரம்பலூர் செட்டிகுளத்தில் 4 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம், மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது, என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in