பொள்ளாச்சி அருகே பரபரப்பு.. வீதியுலா சென்ற தேர் சாலையில் கவிழ்ந்தது..!
பொள்ளாச்சி அருகே பரபரப்பு.. வீதியுலா சென்ற தேர் சாலையில் கவிழ்ந்தது..!
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பழனியூர் மாகாளியம்மன் குண்டம் தேர்த் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று (11-ம் தேதி) குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று (12-ம் தேதி) தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். கோட்டூர் சந்தைப்பேட்டை அருகே தேர் சென்றபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.