சென்னையில் செஸ் ஒலிம்பியாட்.. இன்று ஜோதி ஓட்டம் அறிமுகம் !!
சென்னையில் செஸ் ஒலிம்பியாட்.. இன்று ஜோதி ஓட்டம் அறிமுகம் !!
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டத்தை இன்று (ஜுன் 19) பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கிவைக்க உள்ளார். அங்குள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் மாலை 5 மணியளவில் தொடங்கி வைக்கிறார். ஒலிம்பிக்கைப் போன்று, முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட்டிலும் ஜோதி தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சர்வதேச ஒலிம்பிக் சங்கமான ஃபிடே (FIDE), ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்களில் இதுபோன்று நடத்தப்பட்டதில்லை. செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதலாவது நாடு இந்தியா ஆகும்.
செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஜோதி தொடர் ஓட்டம் இனி எப்போதும் இந்தியாவிலிருந்து தொடங்கி, போட்டி நடைபெறும் நாட்டை அடைவதற்கு முன்பாக அனைத்து கண்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.
ஃபிடே தலைவர் அர்கடி துவார்கோவிச், ஜோதியை பிரதமரிடம் வழங்க, அவர் அதனை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைப்பார். அதன் பிறகு இந்த ஜோதி 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தமிழகத்தில் போட்டி நடைபெறும் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஏற்றிவைக்கப்படும். அனைத்து இடங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இந்த ஜோதியை பெற்றுக் கொள்வார்கள்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. பெருமைக்குரிய இந்தப் போட்டி 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் முதன்முறையாகவும், ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதுதான் நடத்தப்படுகிறது. 189 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். .
newstm.in