மாணவி சிந்துவை சந்தித்த முதல்வர்.. தந்தைக்கு தேநீர் கடை நடத்த அனுமதி..!
மாணவி சிந்துவை சந்தித்த முதல்வர்.. தந்தைக்கு தேநீர் கடை நடத்த அனுமதி..!
சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் மாணவி சிந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோழியுடன் விளையாடும் போது, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததால் இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில், மாணவி சிந்துவுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உயிரைக் காப்பாற்றினர்.
இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும், தொடர்ந்து மாணவி சிந்து தன்னம்பிக்கையுடன் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு அவரது தந்தை தேர்வு மையத்துக்கு தூக்கிச் சென்றார்.
இச்செய்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்ற பிறகு, தேர்வு எழுத 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தேர்வு எழுதி முடித்த பிறகு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அரசு செலவில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25- ம் தேதி) சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
மேலும், சிந்துவின் தந்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்துவதற்கான அனுமதி ஆணை வழங்கினார்.